மன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்!
பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள்.
அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை உணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும்.
டென்ஷன், மறதி, படபடப்பு, கோபம் உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்க வழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும்.
அடுத்து உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தக் குறைபாடு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம்.
தடுக்காமல் விட்டால் மன அழுத்தமாக மாறிவிடும். அப்படி ஆகும் போது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும்.
வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும்.
டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம்.
குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.
இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்டவைகளை தடுக்கலாம்.
இந்த வயதில் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.
நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும்.
தேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கிடைக்கும். 30 வயதுக்கு மேல் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தவும். வாக்கிங் நல்ல பலன் அளிக்கும்.
மது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்களால் டென்ஷன் குறையும் என்று நினைப்பது மூட நம்பிக்கை. இது போன்ற பழக்கங்களை கைவிடுவது அவசியம். சரியான நேரத்துக்கு தூங்கும் பழக்கம் மன அமைதிக்கு நல்லது.
ஆரம்பத்தில் டென்ஷன், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள் விரைவில் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.
ஆஸ்துமா, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள், நாள்பட்ட வலி ஆகியவை மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை அதிகரிக்கும். உடலில் நோய்கள் குடியேறுவதற்கான சாவியே டென்ஷன் தான். டென்ஷன் என்ற சாவியை தொலைத்தால் நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ முடியும்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment